மீன்பிடி தடைகாலம் 14-ந்தேதி நள்ளிரவு முதல் அமல், அதிகாரி தகவல்

மீன்பிடி தடைகாலம் வருகிற 14-ந்தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக மீன்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2018-04-11 22:30 GMT
ராமேசுவரம்,

தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 29-ந் தேதி வரையிலும் 45 நாட்கள் மீன்கள் இனப் பெருக்க காலமாக இ ருந்து வந்தது. இந்த தடை கால சீசனில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழக விசைப் படகு மீனவர்கள் மீன் பிடிக்க அரசால் தடை விதிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் இந்த 45 நாள் தடைகாலமானது 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டின் தடைகாலம் வருகிற 15-ந் தேதி முதல் தொடங்க உள்ளது. ராமேசுவரத்தில் மட்டும் 900-த்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் உள்ளன. தடை காலம் தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையாலும், படகுகள் விடுவிக்கப்படாததாலும் ராமேசுவரத்தில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக குறைந்த அளவிலான விசைப்படகுகளே மீன் பிடிக்க சென்று வருகின்றன.

கடைசி நாள் கடலான நேற்றும் 200 படகுகள் மீன் பிடிக்க செல்ல டோக்கன் பெற்றிருந் தபோதும் 100-க்கும் குறைவான படகுகள் மட்டுமே மீன் பிடிக்க சென்றிருந்தன. 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.

தடைகாலம் தொடங்க உள்ள நிலையில் ராமேசுவரம் பகுதியில் மீனவர்கள் படகுகளில் இருந்து மீன் பிடி வலை, மடி பலகை, ஐஸ் பாக்ஸ், கயிறு உள்ளிட்ட மீன் பிடி சாதனங்களை டிராக்டர், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஏற்றி வீடுகளுக்கு கொண்டு செல்ல தொடங்கி உள்ளனர்.

இது பற்றி ராமேசுவரம் மீன்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- இந்தாண்டின் மீன் பிடி தடை காலமானது வருகிற 14-ந் தேதி நள்ளிரவு 12 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது. அன்றிலிருந்து மீன் பிடிக்க செல்ல மீனவர்களுக்கு அனுமதி இல்லை. டோக்கன் வழங்கப் படமாட்டாது. இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்