கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி: இழப்பீட்டு தொகையை வக்கீல் மோசடி செய்ததாக கூறி சாலைமறியல்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கில் அரசு வழங்கிய இழப்பீட்டு தொகையை வக்கீல் மோசடி செய்ததாக கூறி பலியான குழந்தைகளின் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-11 22:30 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஒரு தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். 18 குழந்தைகள் காயமடைந்தனர். தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோரும் காயமடைந்த மாணவ-மாணவிகளும் அரசிடம் இழப்பீடு கேட்டு வக்கீல் ஒருவர் மூலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி வெங்கட்ராமனை தனி நபர் கமிஷனாக நியமித்து தீ விபத்தில் காயமடைந்த குழந்தைகளின் காயங்களை கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட்டது.

இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி வெங்கட்ராமன், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.6 லட்சமும், மேலும் 3 குழந்தைகளுக்கும் தலா ரூ.5 லட்சமும், சிறு காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.

இந்த இழப்பீட்டு தொகை பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் தஞ்சை மாவட்ட கலெக்டர் மூலம் கடந்த 2016-ம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோர் மற்றும் காயமடைந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையம் முன்பு கும்பகோணம்-திருவிடைமருதூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், தங்களுக்கு அரசு வழங்கிய இழப்பீட்டு தொகையை வக்கீல் ஏமாற்றி பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டதாக குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம், உங்களது புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்