கூட்டுறவு சங்கத்தேர்தலுக்கு எதிரான வழக்கு: வேட்பு மனு செய்தவர்கள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு எதிரான வழக்கில், வேட்பு மனு செய்தவர்களின் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-04-11 23:00 GMT
மதுரை,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,

‘தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக் கான தேர்தலில் பெரும்பாலான சங்கங்களில் ஆளுங்கட்சியினரை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளனர். எதிர்க் கட்சியினரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வாக்குப்பதிவு நடத்தாமலேயே சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களை தேர்வு செய்துள்ளனர். எனவே இந்த தேர்தல் தொடர்பான அறிவிப்பை செல்லாது என்று அறிவித்து, சட்டவிதிகளுக்கு உட்பட்டு முறையாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த 9-ந்தேதி விசாரித்த ஐகோர்ட்டு, “கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடவடிக்கைகளில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, “ஏற்கனவே இதுபோன்ற ஒரு வழக்கில் உள்ளாட்சி சட்ட விதிகளின்படி தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டால் அதில் கோர்ட்டு தலையிட முடியாது என்று 2008-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அது இந்த வழக்கிற்கும் பொருந்தும். மேலும் மனுதாரர், கூட்டுறவு தேர்தலில் பங்கேற்று பாதிக்கப்பட்டவர் கிடையாது. தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய கோர முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

பின்னர் மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “தமிழகத்தில் 9,241 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 7,699 கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலான வேட்பு மனுக்களின் நிலை பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இது ஜனநாயக விரோதம்” என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு நாளை (அதாவது இன்று) ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து இந்த வழக்கில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று ஏற்கனவே கோர்ட்டு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்