காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து என்.எல்.சி. சுரங்க அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி, 210 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நெய்வேலி என்.எல்.சி. சுரங்க அலுவலகத்தை பா.ம.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். இது தொடர்பாக 210 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-11 22:15 GMT
மந்தாரக்குப்பம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.

இந்தநிலையில் என்.எல்.சி. சுரங்க அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் ஒன்று திரண்டனர்.

தொடர்ந்து அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்த பஸ் நிலையத்தில் இருந்து நெய்வேலி என்.எல்.சி. 2-வது சுரங்க அலுவலகத்தை நோக்கி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து என்.எல்.சி. சுரங்க அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதாக 210 பேரை மந்தாரக்குப்பம் போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்