ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முதல்- அமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவு எடுப்பார் என்று செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி,
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவு எடுப்பார் என்று செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
சிரசாசனம் செய்யும் நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் பி.ஏ. வரலாறு முதலாம் ஆண்டு மாணவர் மாரிகண்ணன், உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, உலக சாதனை முயற்சியாக 35 நிமிடம் சிரசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாணவர் மாரிகண்ணன் 35 நிமிடம் தலைகீழாக நின்றவாறு சிரசாசனம் செய்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் கண்ணன், பொருளாளர் மகேஷ், முதல்வர் சிவசுப்பிரமணியன், நாடார் உறவின்முறை சங்க செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் சத்யா, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் சேது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
நிரந்தரமாக மூடுவதற்கு...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை குறித்து முதல்-அமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க முடியாது என்று கூறி விட்டது. நிரந்தரமான தீர்வினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்து உள்ளார். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. எனவே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவை எடுப்பார்.
காவிரி பிரச்சினையில் தேசிய கட்சிகள் தமிழகத்துக்கு ஆதரவாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அந்த கட்சிகளால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் இல்லை. அ.தி.மு.க. மட்டும்தான் காவிரி பிரச்சினைக்காக உண்மையாக போராடி வருகிறது. மற்ற கட்சிகள் காவிரி பிரச்சினையில் அரசியல் செய்து வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்து இருந்தால், பா.ஜ.க.வுக்கு நல்ல பெயர் கிடைத்து இருக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம்
காவிரி பிரச்சினைக்காக போராடி வருகிறவர்களுக்கு தமிழக அரசு பக்க பலமாக உள்ளது. தமிழக அரசு பாதுகாப்பு கொடுத்ததால்தான் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொள்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றம் நடைபெற்ற நாட்களில் முழுமையாக முடக்கினர். தற்போது நாடாளுமன்றம் முடக்கத்தை கண்டித்து, பிரதமர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருக்க உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையிலும் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து போராடும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ், தாமோதரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கணேஷ் பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.