ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்: பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி பாதிப்பு

கரூரில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டதால் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2018-04-11 22:45 GMT
கரூர்,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி தொடங்கி கடந்த 6-ந்தேதியுடன் முடிவடைந்தது. விடைத்தாள்கள் அனைத்தும் அந்தந்த விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கரூரில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையம் வெண்ணைமலையில் சேலம் தேசியநெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள பரணி பார்க் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கியது. ஆசிரியர்களில் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் ஆகியோர் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இன்று (வியாழக்கிழமை) முதல் உதவி தேர்வாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

உள்ளிருப்பு போராட்டம்

இந்த நிலையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் விடைத்தாள் திருத்தும் பணியின் போது நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடுத்த விடைத்தாள்களில் பாதி மட்டும் திருத்தினர். மீதியை திருத்தாமல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரவிசங்கர் கூறியதாவது:-

கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந்தேதிக்கு பிறகு பணிக்கு சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய கோரிக்கை விடுத்து வருகிறோம். கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று (அதாவது நேற்று) தலா ஒருவருக்கு 10 அறிவியல் பாடத்தாள்கள் திருத்த கொடுத்ததில் 5 மட்டும் திருத்தினோம். மீதியை திரும்ப ஒப்படைத்தோம்.

பாதிப்பு

இதேபோல மொழிப்பாட தாள்களிலும் 12-க்கு 6 விடைத்தாள் மட்டும் திருத்தப்பட்டது. உள்ளிருப்பு போராட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். நாளை (அதாவது இன்று) முதல் விடைத்தாள் திருத்தும் பணியில் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர்கள் போராட்டத்தால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் முழுமையாக முடிவடையும் பணி காலதாமதமாகும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்ட பின்பே போராட்டத்தை கைவிட ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்