மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு கட்டிடம் இடித்து தரைமட்டம் போலீசார் விசாரணை

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-04-11 02:18 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க கனிம வள அலுவலர்கள் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வுப்பணி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களை அழைத்து பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. இதை கண்டித்து கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர், அனைத்து கட்சியினர், விவசாயிகள் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி கண்டனத்தை தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் காலை வாழ்க்கை தூத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மர்ம மனிதர்கள் சிலர் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்க அலுவலகத்துக்காக கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து தரை மட்டமாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்த தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கட்டிடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்