பொய்சரில் பரபரப்பு சம்பவம் அரசு பஸ்சை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய வாலிபர்

பொய்சரில் டெப்போவில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-11 00:12 GMT
வசாய்,

பொய்சரில் டெப்போவில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற வாலிபர்

பால்கர் மாவட்டம் பொய்சரில் இருந்து பால்கர் செல்லும் அரசு பஸ் ஒன்று நேற்று காலை பொய்சர் டெப்போவில் நின்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பயணிகள் சிலர் ஏறியிருந்தனர். பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் டெப்போ அலுவலகத்திற்கு சென்றிருந்தனர்.

அந்த நேரத்தில் பஸ்சில் ஏறிய வாலிபர் ஒருவர் திடீரென அங்கிருந்து பஸ்சை ஓட்டிக்கொண்டு சென்றார். அந்த பஸ் தாறுமாறாக சாலையில் ஓடியது.

மரத்தில் மோதியது

இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பீதியில் உறைந்தனர். அவர்கள் செய்வதறியாது அலறினார்கள். டெப்போவில் இருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் தறிகெட்டு ஓடிய பஸ், சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி நின்றது.

இதையடுத்து பயணிகள் அனைவரும் பதறி அடித்து கொண்டு கீழே இறங்கினார்கள். மேலும் பஸ்சை ஓட்டி வந்த வாலிபரை பிடித்து பொய்சர் எம்.ஐ.டி.சி. போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் விசாரணை

இதில், அவரது பெயர் சபிர் அலி மன்சூரி (வயது31) என்பதும், பால்கரில் வசித்து வருவதும் தெரியவந்தது. உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ்சை ஓட்டிக்கொண்டு சென்றதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அவர் மீது போலீசார் திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் வேறு எந்த காரணத்திற்காகவும் பயணிகளுடன் அரசு பஸ்சை ஓட்டிச்சென்றாரா? என்பதை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் பொய்சரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்