காந்திபுரம் 100 அடி சாலையில் அதிக உயரத்தில் மேம்பாலம் கட்டப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம், பா.ஜனதா குற்றச்சாட்டு

காந்திபுரம் 100 அடி சாலையில் அதிக உயரத்தில் மேம்பாலம் கட்டப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-04-10 23:59 GMT
கோவை,

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் 2-ம் கட்டமாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை நேற்று பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், மாவட்ட தலைவர் நந்தகுமார், பொதுச்செயலாளர் ரமேஷ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம், சபரிகிரீஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை 100 அடி சாலையில் தொடங்கி சின்னச்சாமி சாலையில் முடிவடையும் வகையில் 2-ம் கட்ட மேம்பாலம் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. இந்த மேம்பாலத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பலனும் இல்லை. மேலும் இது பாதுகாப்பு குறைபாடுகளுடன் கட்டப்பட்டு வருகிறது. அதிக உயரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள், பழைய வாகனங்கள் மேம்பாலத்தில் செல்ல முடியாமல் பின்னோக்கி வந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதில் வந்து செல்லவும், அந்த பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. தற்போது கட்டப்படும் இந்த மேம்பாலத்தால் காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் செல்ல முடியாது. எனவே முதலில் முடிவு செய்யப்பட்ட மேம்பால கட்டிட வடிவமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?. அந்த கட்டிட வடிவமைப்பை மாற்றியது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இதனை மாற்றியமைக்க வேண்டும்.

இது குறித்து எங்களுடைய சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்ய உள்ளோம். இதுதவிர உக்கடத்தில் மேம்பாலம் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். இந்த மேம்பாலத்தின் வடிவமைப்பை மாற்றாமல் முதலில் அறிவித்தபடியே கட்ட வேண்டும். உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை அரசு உயர்மட்ட மேம்பாலம் கட்ட திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் மெட்ரோ ரெயில் திட்டம் பாதிக்கப்படாதவாறு இந்த மேம்பாலத்தை கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்