காரில் கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி தங்க நகைகள் பறிமுதல்

தார்வாரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.2¼ கோடி தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக கோவாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2018-04-09 23:22 GMT
உப்பள்ளி,

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 12-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதையும், பரிசு பொருட்கள் வழங்குவதையும் தடுக்க தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து வாகனசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தார்வார் தாலுகா அல்னாவர் போலீசார் கபடகட்டி பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது காரில் வளையல்கள் உள்ளிட்ட தங்க நகைகள் இருந்தன. இதையடுத்து காரில் இருந்த 2 பேரிடம் அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா? என்று போலீசார் கேட்டனர். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாக 7 கிலோ 722 கிராம் எடைகொண்ட தங்க நகைகளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மொத்த மதிப்பு ரூ.2¼ கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் காரில் இருந்த 2 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கோவா மாநிலத்தை சேர்ந்த பிரதீப் (வயது 35), விக்கிரமசிங்(28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அல்னாவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்