சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-04-09 22:45 GMT
நாமக்கல்,

எலச்சிபாளையம் ஒன்றியம் போக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது கல்லுப்பாளையம். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் கூறியதாவது :-

கல்லுப்பாளையம் கிராமத்தில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு போக்கம்பாளையத்தில் இருந்து தினசரி காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை.

எனவே குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டதால், காவிரி குடிநீர் சீராக கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்ததால் சிறிது நேரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்