திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் அரசியல் கட்சியினர் போராட்டம்

திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-09 22:45 GMT
மணப்பாறை,

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் 4 கட்டமாக நடத்தப்படுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று 3-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் அங்கு வந்தனர்.

ஆனால் தேர்தல் அதிகாரி வராததால் ஆத்திரமடைந்த முன்னாள் ஒன்றிய தி.மு.க. செயலாளர் மொண்டிப்பட்டி நாகராஜன் தலைமையில் பலரும், அந்த சங்கத்திற்குள் ஊழியர்களை வைத்து பூட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், பசுமாட்டிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல் மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரி வராததால் மணப்பாறை ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமசாமி தலைமையில் அந்த சங்கத்திற்கு முன்பு நின்று கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த சவுந்தரராஜன், ஊழியர்களை வெளியேற்றி விட்டு கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

உப்பிலியபுரம் பகுதியில் டாப்-செங்காட்டுப்பட்டியில் உள்ள பச்சமலை கூட்டுறவு சங்கம், கொப்பம்பட்டி, வைரிச்செட்டிப்பாளையம், ஒக்கரை, சோபனபுரம், எரகுடி ஆகிய கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேர்தலுக்கு வேட்புமனு பெறுவதற்காக அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் சென்றனர். எரகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் திறக்கப்படாததால் அங்கு உப்பிலியபுரம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொப்பம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் திறக்கப்படாததால் ஊராட்சி செயலாளர் மனோகரன் தலைமையில் கட்சிக் கொடியுடன் தி.மு.க.வினர் ஆர்்ப்பாட்டம் செய்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் சங்கர் மற்றும் அக்கட்சியின் தொண்டர்களும் கலந்து கொண்டனர். பச்சமலை டாப்-செங்காட்டுப்பட்டியில் உள்ள பச்சமலை கூட்டுறவு சங்கம் திறக்கப்படாததால் வேட்புமனு பெற வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வைரிச்செட்டிப்பாளையம், சோபனபுரம் ஆகிய 2 கிராமங்களிலும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் வேட்பு மனு வழங்கப்பட்டது.

லால்குடி அருகே உள்ள காட்டூர் கூட்டுறவு சங்கத்திற்கு தி.மு.க. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் வேட்பு மனு வாங்க வந்திருந்தனர். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரி வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பசு மாட்டிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் செய்தனர்.

தா.பேட்டையில் உள்ள பிள்ளாதுறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் யாரும் வராததால் அதிருப்தி அடைந்த அரசியல் கட்சியினர் ஆடு, மாடுகளிடம் வேட்பு மனுக்களை வழங்கி விட்டு சென்றனர். மேலும் கம்யூனிஸ்டு கட்சியினர் தேர்தல் அதிகாரியை கண்டுபிடித்து தருமாறு, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சுமார் 50 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல் சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் திறக்கப்படாததால் மனு தாக்கல் செய்ய வந்த தி.மு.க.வினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சிறுகனூர் அருகே உள்ள எதுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் நேற்று காலை திறந்திருந்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணனிடம் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் வேட்புமனு அளித்தனர்.

புள்ளம்பாடி ஒன்றியத்தில் 7 கூட்டுறவு சங்க அலுவலகங்களுக்கு அதிகாரிகள் வராததால், அவற்றை கட்சி நிர்வாகிகள் பூட்டினர். அழுந்தலைப்பூர் கூட்டுறவு சங்கத்தில் தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் கோல்டன் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் நாய், ஆடு, மாடுகளிடம் மனு கொடுத்தனர். பெருவளப்பூர் கூட்டுறவு சங்கத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் முன்னிலையில் தி.மு.க. நிர்வாகிகள் மனு கொடுக்க சென்றனர். தேர்தல் அதிகாரி வராததால் சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மாட்டிடம் மனு கொடுத்தனர்.

காணக்கிளியநல்லூர் கூட்டுறவு வங்கி முன்பு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் அதிகாரி வராததால் நாயிடம் மனு கொடுத்தனர். கல்லக்குடி அருகே புள்ளம்பாடியில் பாசன வாய்க்கால் சங்க தலைவர் சகாதேவன், தி.மு.க. நகர செயலாளர் முத்துக்குமார், முன்னாள் தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டுறவு சங்கம் செத்துவிட்டது என்று கூறி, வைக்கோல் மீது துணி போர்த்தி பிணம் போல் செய்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கோவாண்டாகுறிச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் சவரிமுத்து மற்றும் வழக்கறிஞர் சேவியர் மற்றும் நிர்வாகிகள் சங்கத்திற்கு பூட்டு போட்டு, புள்ளம்பாடி-திருமானூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். குழுமூரில் கண்ணாகுடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டுறவு சங்கத்தை பூட்டி கோஷமிட்டனர். வெங்கடாஜலபுரம் கூட்டுறவு சங்கத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் பூட்டு போட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

துறையூர் பகுதியில் உள்ள கண்ணனூர், சேனப்பநல்லூர், கிளியனூர் பால் கூட்டுறவு சங்கம், துறையூர் மின்வாரிய சிக்கன நாணய சங்கம் ஆகிய கூட்டுறவு சங்கங்களில் தேர்தலுக்கு வேட்புமனு வழங்க தேர்தல் நடத்தும் அதிகாரி யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க., கம்யூனிஸ்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சங்கங்களை முற்றுகையிட்டனர். இதனால் சங்கங்களை பூட்டிவிட்டு அலுவலர்கள் சென்றனர். துறையூரை அடுத்த கண்ணனூர் கூட்டுறவு சங்கம் முன்பு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் குதிரையிடம் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வையம்பட்டியை அடுத்த பெரியகுளத்துப்பட்டியில் பால் கூட்டுறவு சங்கத்திற்கு ஏற்கனவே தலைவராக இருந்தவரே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நிலை உள்ளதாகவும், அதை தவிர்த்து புதிய நபரை தலைவராக தேர்ந்தெடுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நேற்று மாலை பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். பால் கூட்டுறவு சங்கம் முன்பு திரண்ட அவர்கள் பால் கேனை வரிசையாக அடுக்கி வைத்து விட்டு பாலை ஊற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வையம்பட்டி போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பாலை ஊற்றி சென்றனர். 

மேலும் செய்திகள்