நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை

நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று கோடை மழை பரவலாக பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2018-04-09 21:45 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு முன்னதாகவே கோடை காலம் தொடங்கியது. சூரியன் தனது கோர அக்னி கதிர்களால் சுட்டெரித்தது. இதனால் அணைகள், நீர்நிலைகள் வறண்டு ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. கோடையின் உக்கிரம் தாங்காமல் மக்கள் குளிர்ச்சியை தேடினர். பகல் நேரத்தில் வெளியே நடமாடுவதை குறைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுமாக காணப்பட்டது. இரவு 11 மணியளவில் நெல்லை சந்திப்பு பகுதியில் லேசான மழை பெய்தது. அதை தொடர்ந்து இரவிலும், நேற்று காலை 8 மணியளவிலும் பரவலாக மழை பெய்தது. பாளையங்கோட்டை, பேட்டை, சுத்தமல்லி பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கம், வ.உ.சி. திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

இதேபோல் நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அம்பை, மணிமுத்தாறு, பாபநாசம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு தொடங்கிய மழை நேற்று காலை 8 மணி வரை வெளுத்து வாங்கியது.

செங்கோட்டை, சிவகிரி, சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. செங்கோட்டையில் நேற்று பகல் 1 மணியளவில் லேசான மழை பெய்தது. இதனால் நேற்று பகலில் வெப்பம் குறைந்து காணப்பட்டது. ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் திடீர் திடீரென்று கோடை மழை பெய்துள்ளது. நேற்றும் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது. களக்காடு மலை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள தடுப்பணையை தாண்டி தண்ணீர் விழுகிறது. வறண்டுபோய் காணப்பட்ட பச்சையாறு, நாங்குநேரியான் கால்வாய் உப்பாறு ஆகியவற்றில் சிறிதளவு தண்ணீர் ஓடுகிறது. இதனால் களக்காடு பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அம்பை-38, சேரன்மாதேவி-13, சிவகிரி-9, பாளையங்கோட்டை-6, செங்கோட்டை-6, நெல்லை-4, பாபநாசம்-8, சேர்வலாறு-29, மணிமுத்தாறு-38, கருப்பாநதி-2, குண்டாறு-1, கொடுமுடியாறு-30, அடவிநயினார்-65.

மேலும் செய்திகள்