5 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து தோல் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

5 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து தோல் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திடீரென அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-04-09 23:00 GMT
அணைக்கட்டு,

பள்ளிகொண்டாவை அடுத்த அகரம்சேரியில் தோல் தொழிற்சாலை உள்ளது. தொழிற்சாலையில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 5 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று காலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தொழிற்சங்கத்தின் கவுரவ தலைவர் வில்சன் தலைமை தாங்கினார். தலைவர் அல்லாபக்‌ஷ், செயலாளர் சாந்தகுமார், துணைத்தலைவர் அன்பழகன், துணைச்செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முகமதுசாதிக் வரவேற்றார்.

போராட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள் பேசிக்கொண்டிருந்த போது திடீரென தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு வெளியேவந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர், தொழிற்சாலை நிர்வாக அதிகாரியிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், தொழிற்சாலையின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதாகவும், நாளை (புதன்கிழமை) தான் தொழிற்சாலைக்கு வருவதாகவும் அவரிடம் கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறினார். மேலும் அவர், உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதற்கு தடையில்லை. ஆனால் வெளியே வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் உள்ளே சென்று மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக தொழிற்சங்க கவுரவ தலைவர் வில்சன் கூறுகையில், தொழிலாளார்களுக்கு 2 ஆண்டுகளாக போனஸ், வருங்கால வைப்பு நிதி மற்றும் 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பம் வறுமையில் உள்ளது. எங்களை நம்பி தொழிலாளர்கள் 5 மாதமாக காத்திருந்தனர். பலமுறை தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் தொழிற்சாலை முதலாளியிடம் பேசியும் நாளை சம்பளம் கொடுத்து விடலாம், அடுத்த வாரம் கொடுத்து விடலாம் என்று கூறி காலத்தை கடத்தி வருகின்றனர். தொழிற்சங்க தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சம்பளம் வழங்கும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடை பெறும் என்றார். 

மேலும் செய்திகள்