தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

தேனி கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-04-09 23:00 GMT
தேனி,

தேனி அல்லிநகரம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். அவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 42). இவர்களுக்கு லோகேஷ்வரன் (12) என்ற மகனும், நித்யா (11) என்ற மகளும் உள்ளனர். விஜயலட்சுமி நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு, தனது மகன், மகளை அழைத்து வந்தார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஜயலட்சுமி தான் மறைத்து எடுத்து வந்த கேனில் இருந்த மண்எண்ணெயை தனது உடலிலும், தனது குழந்தைகளின் உடலிலும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அந்த பகுதியில் நின்ற போலீசார் ஓடி வந்து, விஜயலட்சுமியை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விஜயலட்சுமி கூறியதாவது:-

நான் அல்லிநகரத்தில் 2 பெண்களிடம் ஏலச்சீட்டு போட்டு இருந்தேன். ரூ.1 லட்சம் வீதம் 10 சீட்டுகள் போட்டு பணம் கட்டி வந்தேன். 8 சீட்டுகள் முடியும் வரை பணம் கட்டி விட்டேன். 2 சீட்டுகளுக்கு மட்டும் தலா 5 தவணைகள் செலுத்த இருந்த நிலையில், குடும்பச் சூழல் காரணமாக கோவைக்கு கூலி வேலைக்கு சென்று விட்டேன். இந்நிலையில் எனது கணவரும் என்னை பிரிந்து சென்று விட்டார்.

ரூ.50 ஆயிரம் ஏலச்சீட்டு பணம் செலுத்த வேண்டிய நிலையில், என்னிடம் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் கேட்டனர். பின்னர் என் மீது அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்னிடம் கூடுதல் தொகை கேட்டு மிரட்டுவதால் தற்கொலைக்கு முயன்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து விஜயலட்சுமியையும், அவருடைய மகன், மகளையும் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதற்கிடையே தற்கொலைக்கு முயன்றதாக விஜயலட்சுமி மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்