இன்று, அனல்மின் நிலைய முற்றுகை போராட்டம்: நெய்வேலியில் போலீஸ் குவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து என்.எல்.சி. அனல்மின்நிலையத்தை இன்று தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்த உள்ளனர். இதையொட்டி நெய்வேலியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-04-09 23:00 GMT
நெய்வேலி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முழு அடைப்பு போராட்டத்தையும் அவர்கள் நடத்தினர். மாணவர் அமைப்பினரும் ஆங்காங்கே போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. அனல்மின்நிலையத்தை வருகிற 10-ந்தேதி (அதாவது இன்று) முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் என்.எல்.சி. மருத்துவமனை அருகில் ஒன்று திரண்டு, என்.எல்.சி. அனல்மின்நிலையத்தை முற்றுகையிடுவதற்காக பேரணியாக செல்ல இருக்கின்றனர்.பேரணியில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் திரளாக கலந்து கொள்கிறார்கள். இந்த பேரணி செவ்வாய் சந்தை, புதுக்குப்பம் ரவுண்டானா, நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு உள்ள கியூ பாலத்தை சென்றடைகிறது. அங்கு அனல்மின் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

இந்த போராட்டத்தையொட்டி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.ஸ்ரீதர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் போலீஸ் உயர்அதிகாரிகள் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.அப்போது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் மாநில நிர்வாகிகளை அழைத்து போராட்டம் குறித்து பேசினர். முன்னதாக முற்றுகை போராட்டம் நடக்க உள்ள இடத்தை வேல் முருகன் பார்வையிட்டார்.

அதன்பிறகு போராட்டம் நடக்க உள்ள கியூ பாலம், அனல் மின்நிலையம் -1, அனல்மின் நிலையம் முன்பு உள்ள நுழைவு வாயில், சுரங்கம்-1 ஆகிய பகுதிகளை வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.ஸ்ரீதர் தலைமையிலான போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

போராட்டத்தையொட்டி ஐ.ஜி. ஸ்ரீதர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 30 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 500 போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 200 பேர் என 750-க்கும் மேற்பட்ட போலீசார் நெய்வேலியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தின் போது எந்தவிதமான அசம்பாவிதங்களோ, விரும்பத்தகாத நிகழ்வுகளோ நடைபெறாதவாறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும், போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்