விவசாயத்தை காப்பாற்ற ஒன்றுபட்டு போராட வேண்டும்: உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் பேட்டி

விவசாயத்தை காப்பாற்ற விவசாயிகள் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து கூறினார்.

Update: 2018-04-09 22:30 GMT
வேடசந்தூர்,

வேடசந்தூரில் கடந்த 1978-ம் ஆண்டு மின்சார கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இவர்களின் நினைவிடம் வேடசந்தூர்-திண்டுக்கல் ரோட்டில் உள்ளது.

இங்கு உயிர் நீத்த உழவர் தியாகிகளின் 40-ம் ஆண்டு வீரவணக்க நாள், விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்தது.

கூட்டத்துக்கு துணைத்தலைவர் குணசேகர் தலைமை தாங்கினார். செயலாளர் ராமசாமி, போராட்டக்குழுத்தலைவர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கருப்புச்சாமி வரவேற்றார். உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து, தமிழக விவசாயிகள் தொழிலாளர் சங்க நிறுவனர் திருப்பூர் மணி, வேடசந்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன், ம.தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் ராமசாமி, காங்கிரஸ் வட்டார தலைவர் சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. எனவே மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.

விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் கொடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு குழுவின் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும்.

விவசாய தொழிலை பொறுத்தவரையில் மத்திய, மாநில அரசுகள் சரியில்லை. விவசாயிகள் ஒன்றுபட்டு போராடினால் தான் விவசாயத்தை காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக போராட்டத்தின் போது உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மேலும் செய்திகள்