செம்மர கடத்தலுக்கு துணைபோனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன்

செம்மர கடத்தலுக்கு துணைபோனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தெரிவித்தார்.

Update: 2018-04-08 23:41 GMT
சேலம்,

சேலம் புறநகர் மாவட்டத்தில் 30 போலீஸ் நிலையங்கள், 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் என மொத்தம் 35 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலைய பகுதிகளில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்கவும், பொதுமக்கள் பாதுகாப்புக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜன் “தினத்தந்தி” நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி:- புறநகர் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டு உள்ளதா?

பதில்:- புறநகர் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக சாலை விதிமீறல் குறித்த அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்வதை தவிர்த்து, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிராமங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படாத வகையில் முக்கிய இடங்களில் எச்சரிக்கை எதிரொலிப்பான்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் கூடுதலான சிக்னல்கள், எச்சரிக்கை பலகைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் கடந்த ஆண்டின் (2017) முதல் 3 மாதங்களை ஒப்பிடும்போது, இந்தாண்டில் (2018) கடந்த 3 மாதங்களில் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் 46 சதவீதம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. போலீசாரின் நடவடிக்கை மூலம் விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

கேள்வி:- மலை பகுதிகளில் நக்சலைட்டு, மாவோயிஸ்டு நடமாட்டம் இருக்கிறதா?

பதில்:- ஏற்காடு, மேட்டூர், கொளத்தூர், கருமந்துறை, கரியகோவில் உள்ளிட்ட மாலை பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இது தொடர்பாக கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விழிப்புணர்வு கூட்டங்கள் அவ்வப்போது பொதுமக்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளிடம், உங்களிடம் புதிய நபர்கள் ஏதாவது அடிப்படை வசதிகள் இல்லை என்றும், அதை சரிசெய்து புதிதாக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் கூறி அரசுக்கு எதிராக போராட்டம் செய்ய தூண்டும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலை பகுதிகளில் சந்தேகப்படும் படியான நபர்கள் சுற்றி திரிந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசாரும் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். இதனால் மாவட்டத்தில் உள்ள மலை பகுதிகளில் மாவோயிஸ்டு, நக்சலைட்டு நடமாட்டம் இல்லாத பகுதியாக உள்ளது.

கேள்வி:- செம்மர கட்டை வெட்டுவதற்காக அழைத்து செல்பவர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில்:- கருமந்துறை, கரியகோவில், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களை சிலர் மூளை சலவை செய்து, ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து சென்று செம்மர கட்டை கடத்தல் சம்பவங்களில் ஈடுபட வைக்கிறார்கள். இவ்வாறு சென்றவர்கள் சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க சிலரை தற்போது தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அந்த நபர்கள் பொதுமக்களை அழைத்து செல்வது உறுதி செய்யப்பட்டாலோ, செம்மர கடத்தலுக்கு துணைபோனாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் போலீசாருக்கு தெரிவிக்கலாம். பொதுமக்களிடம் அதிகப்படியான பணத்திற்கு ஆசைப்பட்டு செம்மர கடத்தல் சம்பவத்திற்கு துணை போகாதீர்கள் என விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கேள்வி:- சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

பதில்:- கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சாராயம் விற்பது, பணம் வைத்து சூதாடுவது உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை குறைக்கும் வகையில் போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் சாராயம் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட எல்லை பகுதிகளில் சோதனைகள் நடத்தப்படுகிறது. சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக தற்போது 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். சட்டவிரோத செயல் களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேள்வி:- ரவுடிகள் பிரச்சினை, வழிப்பறி சம்பவங்கள் குறைக்கப்பட்டு உள்ளதா?

பதில்:- வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்கள் குற்றச்செயல்களில் ஈடு படுவது தெரியவந்தால் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் சேலம் சரகத்தில் உள்ள சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டு (2017) அதிகபட்சமாக 68 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தற்போது கடந்த 3 மாதங்களில் 18 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். எந்த காரணம் கொண்டும் ரவுடிகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- போலீசாருக்கு மன உளைச்சல் ஏற்படாமல் இருக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

பதில்:- போலீசார் நீண்ட நேரம் பணி புரிகின்றனர். இதனால் மன உளைச்சல் ஏற்படாமல் இருக்க அவ்வப்போது மனோதத்துவ நிபுணர் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதேபோல் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பாரபட்சமின்றி அனைத்து போலீசாருக்கும் பணியினை பிரித்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண நாள், பிறந்தநாள் உள்ளிட்ட போலீசாரின் முக்கிய தினங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

கேள்வி:- சிறுமிகள் மீதான பாலியல் தொல்லை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா?

பதில்:- பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 16, 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள்தான் அதிகமாக பாலியால் தொல்லையால் பாதிக்கப்படுகிறார்கள். பாலியல் தொல்லை தொடர்பாக கடந்த ஆண்டு 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு கோர்ட்டு மூலம் அதிகப்படியான தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது.

கேள்வி:- பொதுமக்கள் புகார் மனுக்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

பதில்:-பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் போலீசாரின் பாதுகாப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்