கிணற்றில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் தவிப்பு தீயணைப்பு படையினர் மீட்டனர்

நாமக்கல் அருகே கிணற்றில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் கிணற்றிற்குள் சிக்கி தவித்து கொண்டு இருந்தனர். அவர்களை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

Update: 2018-04-08 22:45 GMT
நாமக்கல்,


நாமக்கல் அருகே உள்ள வீசாணம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் நல்லையன். இவரது மகன் தருண் விஜயன் (வயது 12). இவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 6–ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் சக்திவேல் (13), வெங்கடாசலம் மகன் ஜீவானந்தம் (14). இவர்கள் இருவரும் அதே பள்ளியில் முறையே 8 மற்றும் 9–ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இவர்கள் 3 பேரில் தருண் விஜயனுக்கு மட்டும் நீச்சல் தெரியும். சக்திவேல், ஜீவானந்தம் ஆகிய இருவருக்கும் நீச்சல் தெரியாது. இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று மாணவர்கள் 3 பேரும், அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்கு குளிக்க சென்றனர்.

சுமார் 80 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 20 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. அதில் மாணவர்கள் 3 பேரும் இறங்கி குளிக்க முயன்று உள்ளனர். அப்போது கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் ஒரு பலகை மீது ஏறி நின்று கொண்டு பாறையை பிடித்தபடி நின்று தவித்துக்கொண்டு இருந்தனர்.


மாணவர்கள் 3 பேரும் கிணற்றிற்குள் தத்தளித்து கொண்டு இருப்பது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், கிணற்றில் தவித்து கொண்டு இருந்த 3 மாணவர்களையும் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

நீச்சல் தெரியாத மாணவர்களை கிணற்றிலோ அல்லது ஏரியிலோ குளிக்க அனுமதிக்க வேண்டாம் என தீயணைப்பு துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்