புதுச்சேரியில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நகலை எரித்து போராட்டம், 52 பேர் கைது

புதுவையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நகலை எரித்து போராட்டம் நடத்திய 52 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-08 23:00 GMT
புதுச்சேரி,

வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அதேபோல் புதுவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தீர்ப்பு நகல் எரிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன் தலைமையில் நிர்வாகிகள் காமராஜர் சிலை அருகே கூடினார்கள். அப்போது அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் அவர்கள் கோர்ட்டு தீர்ப்பு நகலை தீவைத்து கொளுத்தினார்கள். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழக துணைத்தலைவர் இளங்கோ, மாநில செயலாளர் சுரேஷ், பொருளாளர் பெருமாள், இளைஞர் அணி தலைவர் சிவமுருகன், திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, அம்பேத்கர் தொண்டர்படை பாவாடைராயன், மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன் உள்பட சுமார் 52 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அதேபோல் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை கண்டித்து புதுவை தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்காக அவர்கள் நேற்று ரெயில் நிலையம் அருகே கூடினார்கள். பின்னர் இயக்க தலைவர் பிரகாஷ் தலைமையில் ரெயில் நிலைய பகுதிக்குள் சென்று அங்கு திருப்பதி செல்ல இருந்த ரெயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர். சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்