காரைக்காலில் 11-ந்தேதி நடக்கும் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தில் பங்கேற்போம் - நாராயணசாமி தகவல்

காரைக்காலில் வருகிற 11-ந்தேதி நடைபெறும் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தில் பங்கேற்போம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-04-08 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நதி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பினை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம், புதுவை அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் மத்திய அரசை சாடாமல் காங்கிரஸ் கட்சியை அ.தி.மு.க.வினர் குறைகூறி வருகின்றனர். மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியை அ.தி.மு.க. குறைகூறுவதை ஏற்க முடியாது.

சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர புதுவை கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. கோர்ட்டின் தீர்ப்பினை அமல்படுத்த இடைக்கால வழக்கு தொடர அனுமதி அளித்தார். எனவேதான் அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. மூலம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுத்தோம்.

காவிரியில் கர்நாடகா தண்ணீரை திறந்துவிட்டாலும் தமிழகம் நமக்கு உரிய பங்கினை தருவதில்லை. கர்நாடகா, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களும் நம்மை வஞ்சித்து வருகின்றன. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆண்டாலும் நாங்கள் நமது உரிமைக்காக போராடி வருகிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்திற்கு வருகிற 11-ந்தேதி அவர் வருகிறார். இதில் நானும், காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோரும் பங்கேற்கிறோம்.

புதுவை நெல்லித்தோப்பில் அடகு கடைக்காரர் கொலைவழக்கில் 4 ஆண்டுகளுக்குப்பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் தலையீடு காரணமாக இந்த கொலையில் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருந்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் இந்த வழக்கில் சிறப்பு கவனம் செலுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொலைகள், வீடுகள், நிலம் அபகரிப்பு பகிரங்கமாக நடந்தது. எங்கள் ஆட்சியில் ரவுடிகளை ஒடுக்கி உள்ளோம். 19 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது குற்றங்கள் குறைந்துள்ளது. புதுவை அமைதிப்பூங்காவாக திகழவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

நமது மாநிலத்தேவைக்காக ரூ.1,200 கோடிக்கு மின்சாரம் கொள்முதல் செய்கிறோம். ஆனால் மின்துறை மூலம் நமக்கு ரூ.1000 கோடிதான் வருமானம் கிடைக்கிறது. கடந்த ஆண்டே மின்சார கட்டண உயர்வு தொடர்பாக எனக்கு கோப்புகள் வந்தன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது நமது மாநிலத்தில் மின்சார கட்டணம் குறைவுதான். இருந்தபோதிலும் மின்கட்டண உயர்வு தொடர்பாக எனக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்