பெங்களூருவில் மெட்ரோ ரெயிலில் ராகுல் காந்தி பயணம்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராகுல்காந்தி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.

Update: 2018-04-08 22:30 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராகுல்காந்தி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். மேலும் சாலையோர கடையில் ஐஸ் வாங்கி சாப்பிட்டார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெங்களூருவில் நேற்று கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். காலையில் துப்புரவு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அதன் பிறகு தொழில் அதிபர்கள், வணிகர்கள், பெண் சாதனையாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ராகுல் காந்தி விதான சவுதா அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

அவருடன் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்களும் வந்திருந்தனர். ரெயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர் முன்பு ராகுல் காந்தி சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் ‘செல்பி’ படம் எடுத்து மகிழ்ந்தார். அதன் பின்னர் ராகுல்காந்தி மற்றும் தலைவர்கள் அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் ஏறினர்.

அந்த ரெயில் எம்.ஜி. ரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தது. அங்கு ராகுல் காந்தி மற்றும் தலைவர்கள் இறங்கினர். மெட்ரோ ரெயிலில் ராகுல் காந்தியை பார்த்ததும் பயணிகள் ஆர்வமுடன் செல்போனில் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.

அதையடுத்து ராகுல் காந்தி அங்கு இருந்து சர்ச் தெருவில் உள்ள ஒரு புத்தக கடைக்கு சென்றார். அங்கு தனக்கு பிடித்தமான சில புத்தகங்களை அவர் தேர்வு செய்தார். அந்த புத்தகங்களை பணம் செலுத்தி வாங்கிய சித்தராமையா, அவற்றை ராகுல்காந்திக்கு பரிசளித்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள சாலையோர ஐஸ்கிரீம் கடைக்கு ராகுல்காந்தி சென்றார். அங்கிருந்த கடை உரிமையாளர் மகிழ்ச்சி பொங்க ராகுல் காந்தியை வரவேற்றார். அவருடன் ராகுல்காந்தி கைகுலுக்கினார். பின்னர் அவர் பணம் கொடுத்து ஐஸ் வாங்கி ருசித்து சாப்பிட்டார்.

மேலும் செய்திகள்