காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கக்கநல்லா சோதனை சாவடியை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கக்கநல்லா சோதனை சாவடியை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-08 22:45 GMT
மசினகுடி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்து வரும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க கோரியும், ஊட்டியில் புதியதாக கர்நாடக அரசு திறந்துள்ள பூங்காவை மூட கோரியும் நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள கக்கநல்லா சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிசங்கர், கஜேந்திரன், ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் மசினகுடி இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் 150-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை தெப்பகாடு பகுதியில் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த நேற்று காலை கூடலூரில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 100-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கக்கநல்லா சோதனை சாவடியை நோக்கி வந்தனர்.

அவர்களை போலீசார் கக்கநல்லா சோனை சாவடிக்கு செல்ல அனுமதிக்காமல் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காட்டில் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தெப்பகாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்டியினர் பின்னர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்து கூடலூர் அழைத்து சென்றனர்.

இதற்கிடையே அனுமதியின்றி கக்கநல்லா சோதனை சாவடியை நாம் தமிழர் கட்சியினர் சிலர் முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. இதனையடுத்து கக்கநல்லா சோதனை சாவடியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது. 

மேலும் செய்திகள்