செல்போனை திருடிவிட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை திருடன் என்று கூறிய வாலிபர் கைது

ஈரோட்டில், விபத்தில் காயமடைந்தவரின் செல்போனை திருடி விட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரை திருடன் என்று கூறிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-04-07 22:56 GMT
ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னராசு. இவருடைய மகன் ஜீவானந்தம் (வயது 22). இவர் நேற்று இரவு தனது மோட்டார்சைக்கிளில் ஈரோடு சுவஸ்திக் கார்னர் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நிலைதடுமாறி திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து ஜீவானந்தம் ரோட்டில் விழுந்து விட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் ஜீவானந்தத்தின் செல்போனை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ‘திருடன், திருடன்’ என்று சத்தம் போட்டனர். பொதுமக்களின் சத்தம் கேட்டு, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வல பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் ஓடிச்சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தார்.

அப்போது அந்த வாலிபர் ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புச்சுவரில் ஏறி நின்று, ‘போலீசார் தன்னுடைய செல்போனை திருடி விட்டார் என்று சத்தம் போட்டு அலறினார். மேலும் அவரை பிடித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதை கவனித்ததும் அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் போலீசாரை சூழ்ந்து கொண்டனர். மேலும் அங்கிருந்த இளைஞர்கள் பலர் இந்த காட்சிகளை தங்களுடைய செல்போனில் படம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மற்ற போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அந்த வாலிபரின் பையில் ஜீவானந்தத்தின் செல்போன் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ‘அவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 26) என தெரியவந்தது. இதையடுத்து கவுதமன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததுடன், அவரிடம் இருந்த ஜீவானந்தத்தின் செல்போனையும் மீட்டனர்.

இதற்கிடையே படுகாயம் அடைந்த ஜீவானந்தம் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்