வந்தவாசி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாரிடம் ரூ.69 லட்சம் பறிமுதல்

வந்தவாசி ஆதிதிராவிடர் நல தனிதாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.69 லட்சம் பறிமுதல் செய்து அதனை மூட்டை மூட்டையாக கட்டி வாகனத்தில் ஏற்றினர்.

Update: 2018-04-07 23:00 GMT
வந்தவாசி,

வந்தவாசி பொட்டிநாயுடு தெருவில் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு தனி தாசில்தாராக அற்புதமும் மற்றும் ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். வந்தவாசி தாலுகாவில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான 18 விடுதிகளின் நிர்வாகம் இந்த அலுவலகத்தின்கீழ்தான் செயல்படுகிறது. இந்த விடுதிகளில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதி மாணவர்களுக்கு உணவுக்கான தொகை மற்றும் வார்டன்கள், ஊழியர்களுக்கான சம்பளத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும், பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் புகார்கள் சென்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் திருவண்ணாமலையிலிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை சூப்பிரண்டு சரவணகுமார் தலைமையில் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள ஆவணங்களை சரிபார்த்து அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அருகே உள்ள ஒருவரது வீட்டிலும் சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பின்னரும் சோதனை நீடித்தது.

இந்த சோதனையின்போது ஆதிதிராவிடர் நலத்துறைக்காக வழங்கப்பட்டிருந்த ரூ.69 லட்சத்து 7 ஆயிரத்து 416 பறிமுதல் செய்யப்பட்டது. அதனை மூட்டை மூட்டையாக கட்டி வாகனத்தில் ஏற்றி வந்தவாசி தாலுகா அலுவலகத்துக்கு நேற்று காலை கொண்டு வந்தனர். அதனை தாசில்தார் முரளிதரனிடம் ஒப்படைத்தனர். அந்த பணம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

இது குறித்து ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அற்புதம் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்