காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தர்மபுரியில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-04-07 23:00 GMT
தர்மபுரி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.

தலைமை நிலைய செயலாளர் பி.பழனியப்பன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். கட்சியின் அவைத்தலைவர் அன்பழகன், பொருளாளர் ரங்கசாமி முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, செந்தமிழன், தகவல் தொழில்நுட்பபிரிவு மாநில தலைவர் பாலு, மாநில வக்கீல் அணி நிர்வாகி அசோக்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்தியஅரசு தமிழக மக்களையும் அவர்களுடைய நியாயமான உணர்வுகளையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி நடப்பதால் காவல்துறை எவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதற்கு இது உதாரணம். காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டாலும் அதையும் மீறி திரளான தொண்டர்கள் இங்கே திரண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசுக்கு சேவகம் செய்யும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அந்த அரசை உருவாக்கியவர்களுக்கும் நன்றி உணர்வுடன் இல்லை. வாக்களித்த மக்களுக்கும் நன்றி உணர்வுடன் இல்லை என்பது காவிரி பிரச்சினையில் இவர்களின் செயல்பாடு மூலம் நன்றாக தெரிகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற திட்டத்தோடு தமிழகத்தின் நியாயமான உரிமையை தர மறுக்கிறது. மத்திய அரசுக்கு அடிபணிந்துள்ள தமிழக அரசு அதற்கு துணை போகிறது.

மக்களின் உரிமைக்காக போராடும் முதுகெலும்பு உள்ள தொண்டர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெறும் தற்போதைய ஆட்சி உயிர்ப்புடன் இல்லை. அதுவெறும் எலும்புகூடுதான். ஆட்சி அதிகாரம் பறிபோனால் மண்டையோடு மட்டுமே இருக்கும். இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை மீட்கும் வரை இந்த போராட்டம் ஓயாது. மக்கள் பலமும், தொண்டர் பலமும் நமக்கு உள்ளதால் இந்த போராட்டம் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் முத்துசாமி, மாவட்ட துணை செயலாளர் ஏகநாதன், ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி, பாஸ்கர், சாம்ராஜ், கவுதமன், குப்புசாமி, பார்த்திபன், கருணாகரன், கணேசன், பூங்காவனம், சென்னகேசவன், தன்ராஜ், நகர செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைசெயலாளர் ஆர்.ஆர்.முருகன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்