காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டாக்டர்கள்-நர்சிங் மாணவிகள் ஊர்வலம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி டாக்டர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் ஊர்வலம் சென்றனர்.

Update: 2018-04-07 22:30 GMT
பெரம்பலூர்,

இந்திய மருத்துவ சங்கத்தின் பெரம்பலூர் கிளை சார்பில், தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்கும் பொருட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி டாக்டர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் பெரம்பலூர் சங்கு பேட்டையில் இருந்து ஊர்வலம் சென்றனர். சங்கத்தின் முன்னாள் கிளை தலைவர் செங்குட்டுவன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி விளக்கும் வகையில், காவிரித்தாயை திறந்துவிடு தமிழகத்திற்கு... என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியே டாக்டர்கள் உள்ளிட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி பிரச்சினையில், “ஸ்கீம்” என்றால் என்ன? என பல்வேறு சந்தேக கேள்விகளை எழுப்பி 3 மாத கால அவகாசம் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்து தமிழகத்தை புறக்கணிக்கும் முனைப்பில் செயல்படும் மத்திய அரசுக்கு எதிராக ஊர்வலத்தில் சென்றவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் மாநில அரசானது உரிய வகையில், காவிரி பிரச்சினையை எடுத்து கூறி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த ஊர்வலமானது ரோவர் ஆர்ச் சிக்னல், வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக சென்று பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் இந்திய மருத்துவ சங்க கிளை செயலாளர் கருணாகரன், பொருளாளர் நெடுஞ்செழியன், மாநிலக்குழு உறுப்பினர் கதிரவன், மத்தியக்குழு உறுப்பினர் வல்லபன், பெரம்பலூர் அரசு மருத்துவமனை டாக்டர் ரமேஷ் உள்பட பெரம்பலூர் பகுதி டாக்டர்கள், நர்சிங் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்