கோவிலில் பொங்கல் வைப்பதில் தகராறு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

காரையூர் அருகே கோவிலில் பொங்கல் வைப்பதில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக நடந்த சமாதான கூட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-04-07 23:00 GMT
காரையூர்,

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள கண்டெடுத்தான்பட்டியில் எழுவக்க நாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி பொங்கல் வைத்து வழிபடுவது குறித்து ஒரே சமூகத்தினை சேர்ந்த இரு தரப்பினரிடைய கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இது குறித்து பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சமாதான கூட்டத்தில் இரு தரப்பினரும் கிராம வழக்கப்படி அமைதியான முறையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று கோவிலில் பொங்கல் வைக்க இருதரப்பினரும் வந்தனர். அப்போது இருதரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன் தலைமையில் காரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டத்தை நடத்தினர். அப்போது கூட்டத்தில் திடீரென சிலர் கட்டை மற்றும் கல்லால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடத்தை தாக்கினர். இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் பொன்னமராவதி தாசில்தார் சங்கர், அரசமலை வருவாய் ஆய்வாளர் திலகம், அரசமலை கிராம நிர்வாக அதிகாரி சவுந்திரபாண்டியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீண்டும் இருதரப்பினர் இடையே சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து சமாதான கூட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒரு தரப்பை சேர்ந்த 2 பேரை காரையூர் போலீசார் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த தரப்பினர் நேற்று இரவு அரசமலை என்ற இடத்தில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்