பிளஸ்-2 மாணவியை கடத்தியதாக கைதான வாலிபர் தப்பி ஓட்டம்

பிளஸ்-2 மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக கைதான வாலிபர், தண்டையார்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-04-07 21:45 GMT
பெரம்பூர்,

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஸ்டீபன்(வயது 25). இவர், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவிக்கும், ஸ்டீபனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அந்த மாணவி திடீரென மாயமானார். இதுபற்றி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தண்டையார்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் மாணவியை, ஸ்டீபன்தான் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று, வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் தங்க வைத்து இருப்பது தெரியவந்தது.

நேற்று முன்தினம் வேளச்சேரிக்கு விரைந்து சென்ற மகளிர் போலீசார், மாணவியை மீட்டனர். இதையடுத்து ‘மைனர்’ பெண்ணை கடத்தியதாக ஸ்டீபனை கைது செய்தனர். இருவரையும் தண்டையார்பேட்டை மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கைதான ஸ்டீபனை, விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் வைத்து இருந்தனர். அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் தூக்க கலக்கத்தில் இருந்தபோது, ஸ்டீபன் நைசாக போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

காலையில் எழுந்து பார்த்த போலீசார், கைதி தப்பி ஓடிவிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தப்பி ஓடிய கைதியை மகளிர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்