காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருப்பூரில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருப்பூரில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு கட்சியினர், அமைப்புகள் சார்பில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தே.மு.தி.க. சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தே.மு.தி.க.வின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் திருப்பூரில் குமரன்சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொறுப்பாளர் முத்து வெங்கடேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் குழந்தைவேலு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநில துணை செயலாளர் அக்பர் முன்னிலை வகித்தார்.
மத்திய பகுதி செயலாளர் ஷாஜஹான் வரவேற்று பேசினார். மாவட்ட துணை செயலாளர் சரவணகுமார், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ஆனந்த், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்தும், வாரியம் அமைக்க போதிய அழுத்தம் கொடுக்காமல் இருந்து வரும் தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், தமிழக விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.