தே.மு.தி.க. சாலை மறியல்- முற்றுகை போராட்டம்

சென்னை புறநகர் பகுதியில் தே.மு.தி.க.வினர் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-07 23:00 GMT
பெரம்பூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் வடசென்னை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் அம்பேத்கர் கல்லூரி எதிரே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் அழகேசன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 220 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் தாம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமை தாங்கினார். தாம்பரம் நகர செயலாளர் செழியன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேபோல் ஆவடி நகராட்சி அலுவலகம் அருகே தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்