காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெல்லையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெல்லையில் தே.மு.தி.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரெயில் மறியலில் ஈடுபட்ட 49 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும், அதை அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் முகமது அலி தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெயச்சந்திரன், துணை செயலாளர் சிவா, தொழிற்சங்க தலைவர் காமராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மகளிர் அணி அமுதா, சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தே.மு.தி.க. சார்பில் ஸ்ரீபுரம் தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடத்துவதாக இருந்தது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததை அடுத்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ் புலிகள் கட்சியினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவு வாசல் வழியாக நேற்று மதியம் திடீரென்று நுழைந்தனர். பின்னர் அங்குள்ள தண்டவாளத்தின் குறுக்கே கட்சி பேனரை உயர்த்தி பிடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், ரெயில் நிலையத்துக்குள் சென்று, அங்கு ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சி மாவட்ட நிதி செயலாளர் கோவிந்தன், நிர்வாகிகள் வளவன், மாடத்தி, ராஜ்குமார், தமிழரசு, செயலாளர் தமிழ்செல்வன் உள்பட 15 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் அழைத்துச் சென்று ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த திடீர் போராட்டத்தால் நெல்லை சந்திப்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழர் விடுதலை களம் அமைப்பு சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் நேற்று காலை ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வக்கீல் சாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆத்துவழி சுரேஷ், மேற்கு மாவட்ட செயலாளர் கட்டபொம்மன், இளைஞர் அணி செயலாளர் நன்னை முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் மகேந்திரன், பசுபதி காளி, மதுரை வீரன் உள்பட 34 பேர் கலந்து கொண்டனர். அவர்களை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெய்சல் குமார் மற்றும் போலீசார் கைது செய்தனர்.