கோவை- நாகர்கோவில் ரெயில் புறப்பட தாமதம்: ரெயில் நிலைய அதிகாரி அலுவலகம் முற்றுகை

கோவை- நாகர்கோவில் பயணிகள் ரெயில் புறப்பட தாமதமானதால் கரூரில் ரெயில் நிலைய அதிகாரி அலுவலகத்தை பயணிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-07 23:00 GMT
கரூர்,

கரூர்- திண்டுக்கல் ரெயில் பாதையில் எரியோடு- பாளையம் இடையே ரெயில்வே சுரங்கபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக நேற்று ரெயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பயணிகள் ரெயில் நேற்று காலை புறப்பட்டு வந்தது. கரூர் ரெயில் நிலையத்திற்கு பகல் 11.20 மணிக்கு வர வேண்டியது ஒரு மணி நேரம் 50 நிமிடம் தாமதமாக பகல் 1.10 மணிக்கு 2-வது நடைமேடைக்கு வந்தது. இந்த நிலையில் ரெயில் புறப்படாமல் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து பயணிகள் சிலர் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது எரியோடு அருகே ரெயில்வே சுரங்கபாதை பணியின் காரணமாக ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் சிறிது நேரத்தில் இயக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாலை 3 மணி ஆகியும் ரெயில் இயக்கப்படவில்லை. இதற்கிடையில் பகல் 2.20 மணிக்கு வர வேண்டிய ஈரோடு- நெல்லை பயணிகள் ரெயில் மாலை 3.10 மணி அளவில் கரூர் ரெயில் நிலையத்திற்கு 3-வது நடைமேடையில் வந்தது. அந்த ரெயிலும் புறப்பட தாமதமானது.

கோவை- நாகர்கோவில் ரெயிலில் வந்த பயணிகள் ஆத்திரமடைந்து ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் வண்டி எப்போது புறப்படும்? என கேட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ரெயில்வே சுரங்கபாதை பணி நடைபெறுவது என்றால் ரெயிலை ரத்து செய்ய வேண்டியது தானே என ஆவேசமாக கேள்வி எழுப்பினர். ரெயில் புறப்பட தாமதமானதால் பயணிகளுக்கு டிக்கெட் தொகையை திருப்பி வழங்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர். இதில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு டிக்கெட் எடுத்தவர்களுக்கு டிக்கெட் கட்டண தொகை குறைவாக திருப்பி வழங்கப்பட்டதால் பயணிகள் மேலும் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முழு தொகையும் திருப்பி வழங்க கோரினர். மேலும் மாற்றாக பஸ் வசதியும் ஏற்படுத்த கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து மதுரை வரைக்கும் இலவசமாக செல்வதற்காக 2 அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. டிக்கெட்டை கவுண்ட்டரில் கொடுத்து பலர் பணத்தை திரும்ப பெற்றனர். பஸ் வந்ததும் அதில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கூடுதல் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

இந்த நிலையில் திடீரென கோவை-நாகர்கோவில் பயணிகள் ரெயில் புறப்பட போவதாக ஒலிபெருக்கியில் அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் ரெயில் நிலையத்தின் வெளியே நின்றிருந்தவர்களும், பஸ்சில் அமர்ந்திருந்தவர்களும் ரெயிலில் ஏறுவதற்காக வேகமாக ஓடி வந்தனர். முதலாவது நடைமேடையில் தண்டவாள பாதையில் இறங்கி படிக்கட்டில் சிரமப்பட்டு ரெயிலில் ஏறினர்.

மாலை 4.20 மணி அளவில் ரெயில் புறப்பட தொடங்கியது. அப்போது வயதான தம்பதியினர் 2 பேர் ரெயிலில் ஏற முயன்ற போது ரெயில்வே ஊழியர் உடனடியாக கவனித்து சிவப்பு கொடியை அசைத்து ரெயிலை நிறுத்த என்ஜின் டிரைவருக்கு சைகைகாட்டினார்.

அப்போது வாக்கி-டாக்கியில் என்ஜின் டிரைவருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்து ரெயிலை நிறுத்த கூறினர். இதைதொடர்ந்து ரெயில் நின்றது. அதன்பின் அதில் வயதான தம்பதியினர் ஏறியதை தொடர்ந்து ரெயில் புறப்பட்டு சென்றது.

கரூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈரோடு- நெல்லை ரெயில் பயணிகள் பலரும் கோவை- நாகர்கோவில் ரெயிலில் ஏறினர். இதனால் ஈரோடு- நெல்லை பயணிகள் ரெயிலில் பெரும்பாலான பெட்டிகள் காலி இருக்கையுடன் காணப்பட்டன. ஒரு சில பயணிகள் மட்டும் அமர்ந்திருந்தனர். சிறிது நேர தாமதத்திற்கு பின்பு ஈரோடு- நெல்லை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. கரூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் அதிகாரி அலுவலகத்தை முற்றுகை சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 

மேலும் செய்திகள்