உச்சிப்புளி அருகே வீடுபுகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வழக்கில் 3 பேருக்கு 5 ஆண்டு ஜெயில்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே வீடுபுகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வழக்கில் 3 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவிட் டுள்ளது.

Update: 2018-04-07 21:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள இரட்டையூருணி பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவருடைய மகன் சிவக்குமார். இவர் கடந்த 1997-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந்தேதி இரவு தென்னந்தோப்பில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். அப்போது அங்கு வந்த 6 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி சிவக்குமார் மற்றும் அவரின் மனைவி வாசுகி உள்பட குடும்பத்தினரை வீட்டினுள் அமர வைத்தனர்.

இதன்பின்னர் மர்ம நபர்கள் வீட்டினை உள்பக்கமாக பூட்டிவிட்டு துப்பாக்கி முனையில் மிரட்டி சிவக்குமார் குடும்பத்தினர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள், பணம், வாட்சு போன்றவற்றை கொள்ளைஅடித்தனர். இவ்வாறு மொத்தம் 36 பவுன் தங்க நகை, வாட்சு, ரொக்கம் ரூ.1,500 ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் உச்சிப்புளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் துப்பாக்கி முனையில் வீடுபுகுந்து கொள்ளையடித்து சென்ற திருவாடானை அருகே உள்ள சூச்சனி பகுதியை சேர்ந்த பாலு மகன் கண்ணன்(வயது 55), சந்திரகோட்டை காளிமுத்து மகன் கோபால்(52), இளங்குளம் கருப்பன் மகன் சுப்பிரமணி(48), தோட்டாமங்கலம் பாலு மகன் ஜெயக்குமார்(41), மேலகைக்குடி கண்ணுச்சாமி மகன் வேலு(63), எஸ்.கே.ஊருணி ஆறுமுகம் மகன் தேங்காய்பாண்டி(53) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஜெயக்குமார் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் தன் மீதான குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டு வழக்கை முடித்து கொள்வதாக தெரிவித்ததால் அவர் சிறையில் இருந்த 4 ஆண்டு 9 மாதம் காலத்தினை சிறை தண்டனையாக வழங்கி அப்போதைய நீதிபதி விடுதலை செய்தார்.

மீதம் உள்ள 5 பேர் மீதான வழக்கு விசாரணை மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த சப்-கோர்ட்டு நீதிபதி ப்ரீத்தா, துப்பாக்கி முனையில் கொள்ளை யடித்த வழக்கில் கண்ணன், கோபால், சுப்பிரமணி ஆகிய 3 பேருக்கும் 5 ஆண்டு ஜெயில் த ண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். தேங்காய்பாண்டி, வேலு ஆகியோரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சவுந்திரபாண்டியன் ஆஜரானார்.

மேலும் செய்திகள்