மகளின் கண்முன்னே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நிலவள வங்கி இயக்குனர் சாவு

கிணத்துக்கடவு அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நிலவள வங்கி இயக்குனர் இறந்தார்.

Update: 2018-04-07 21:45 GMT
கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (வயது59). அ.தி.மு.க. பிரமுகர். இவருக்கு தனலட்சுமி (55) என்ற மனைவியும், பூஜாஸ்ரீ (21), வைஜெயந்திஷா (17) என்ற மகள்களும் உள்ளனர். ராஜேந்திரகுமார், கடந்த முறை கிணத்துக்கடவு அண்ணாநகரில் உள்ள நிலவளவங்கியின் தலைவராகவும், நிலவளவங்கியின் முன்னாள் மாநில இயக்குனராகவும் இருந்தார். தற்போது நடைபெற்ற தேர்தலில் நிலவள வங்கியின் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் நிலவளவங்கி தலைவர்பதவிக்கும் வரும் 9-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை, இவர் தனது வீட்டில் இருந்து தோட்டத்துக்கு சென்றார். அங்குள்ள தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, மகள் பூஜாஸ்ரீயுடன்சென்றார். பின்னர் அவர் அங்குள்ள 8 அடி ஆழமுள்ள தரைமட்ட தொட்டியில் தண்ணீர் எவ்வளவு உள்ளது எனபார்த்த போது, தொட்டியில் இருந்த பிளாஸ்டிக் தார்பாய் வழுக்கியது. இதில் அவர் நிலை தடுமாறி தண்ணீருக்குள் தவறி விழுந்து மூழ்கினார். இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை நேரில் பார்த்துக்கொண்டிருந்த அவரது மகள் பூஜாஸ்ரீ, அதிர்ச்சி அடைந்து, தந்தையை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் எழுப்பினார்.

உடனே அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் தொட்டியில் கிடந்த ராஜேந்திரகுமாரை மீட்டனர். இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனைசெய்தபோது ராஜேந்திரகுமார் இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் விரைந்து வந்து, ராஜேந்திரகுமார் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் கண்முன்னே நிலவளவங்கி இயக்குனர்தண்ணீரில்மூழ்கி இறந்த சம்பவம் சுற்றுவட்டாரபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்