கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம்

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுத்தைப் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-04-07 21:30 GMT
கூடலூர்,

கூடலூர் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்தால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்கும் செயல்களும் நடைபெற்று வருகிறது. இதேபோல் சிறுத்தைப்புலிகள் இரவில் ஊருக்குள் புகுந்து வளர்ப்பு பிராணிகளை பிடித்து செல்கிறது.

இந்த நிலையில் கூடலூர் அருகே பாண்டியாறு அரசு தேயிலை தோட்டம் சரகம் எண்1 மரப்பாலம் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு இரவில் வெளியே வர அச்சத் துடன் உள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் என்பவரது வளர்ப்பு நாயை சிறுத்தைப்புலி கடித்து இழுத்து சென்றது. இதனால் நாளுக்குநாள் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து கூடலூர் வன அலுவலர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடிய வில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் தேயிலை செடிகளுக்கு இடையே பதுங்கி இருந்த சிறுத்தைப்புலி ஒன்று விளையாடி கொண்டிருந்த குழந்தைகளின் கண் எதிரே அப்பகுதியில் சுற்றி வந்த வளர்ப்பு நாயைபிடித்து இழுத்து சென்றது.

இதனால் குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சிறுத்தைப் புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்க வில்லை எனில் பொதுமக்களை சிறுத்தைப்புலி தாக்கும் அபாயம் உள்ளது. எனவே சிறுத்தைப்புலியிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர். இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்