அரசாங்கத்தை கேள்வி கேட்கும் துறை நீதித்துறை - ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு

அரசாங்கத்தை கேள்வி கேட்கும் துறை நீதித்துறை என்று ஐகோர்ட்டு நீதிபதி பேசினார்.

Update: 2018-04-07 21:30 GMT
பரமக்குடி,

பரமக்குடி நீதிமன்றத்தில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சாய்தள நடைபாதை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி முரளிதரன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். பரமக்குடி வக்கீல்கள் சங்க தலைவர் கந்தசாமி, செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட நீதிபதி கயல்விழி வரவேற்று பேசினார். விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி முரளிதரன் பேசியதாவது:- பரமக்குடி வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யாதது பெருமைக்குரியதாகும். வேலை நிறுத்தம் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. நம்மை நம்பி வருபவர்களை நினைத்து பார்க்க வேண்டும். பரமக்குடியில் விரைவில் மகிளா நீதிமன்றம் அமைக்கப்படும். வக்கீல்களை பார்க்காமல் வழக்காளர்களை பார்த்துத்தான் தீர்ப்பு அளித்துள்ளேன்.

வக்கீல் தொழில் மிகச்சிறந்ததாகும். அரசாங்கத்தை கேள்வி கேட்கும் துறை நீதித்துறை தான். அரசு தவறான உத்தரவை போட்டால் அதற்கு தடை விதிப்பது நீதிமன்றம்தான். வழக்காளர்களை ஏமாற்றும் எண்ணம் வரக்கூடாது. வக்கீல் தொழில் பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் அல்ல. நம்பி வந்தவர்களுக்கு தேவையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கூடுதல் மாவட்ட நீதிபதி லிங்கேசுவரன், சார்பு நீதிபதிகள் பரமக்குடி வெங்கடேசன், முதுகுளத்தூர் சரவணக்குமார், ராமநாதபுரம் கீதா, பரமக்குடி வக்கீல் சங்க பொருளாளர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி அனில்குமார் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்