திண்டுக்கல் அருகே கல்லூரி வேன் மீது லாரி மோதல்: மாணவ-மாணவிகள் 21 பேர் காயம்

திண்டுக்கல் அருகே தனியார் கல்லூரி வேன் மீது லாரி மோதிய விபத்தில் மாணவ-மாணவிகள் 21 பேர் காயமடைந்தனர்.

Update: 2018-04-07 21:30 GMT
சாணார்பட்டி,

திண்டுக்கல் அருகே உள்ள நொச்சிஓடைப்பட்டியில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களை அழைத்து வருவதற்காக கல்லூரி சார்பில் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

நேற்று சாணார்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரிக்கு வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. வேனில் சுமார் 30 பேர் இருந்தனர். நொச்சிஓடைப்பட்டி அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக வேனின் பின் பகுதியில் மோதியது. இதில் வேனின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.

இந்த விபத்தில் 6 மாணவர்கள், 15 மாணவிகள் என மொத்தம் 21 பேர் காயமடைந்தனர். இதனால் மாணவர்கள் அலறித்துடித்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ்சின் முன்புற இருக்கைகளில் உள்ள கம்பியில் மாணவ-மாணவிகளின் தலை மோதியுள்ளது. இதனால் அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்