‘நாத்திக சக்திகளுக்கு சவாலாக திகழ்ந்தவர் ஜெயேந்திரர்’ இல.கணேசன் எம்.பி. பேச்சு

தமிழகத்தில் நாத்திக சக்திகளுக்கு சவாலாக திகழ்ந்தவர் மடாதிபதி ஜெயேந்திரர், அவருடைய மறைவு இந்து மதத்திற்கு பேரிழப்பாகும் என்று இல.கணேசன் எம்.பி. கூறினார்.

Update: 2018-04-07 22:45 GMT
சென்னை,

விசுவ இந்து பரிஷத் சார்பில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீரங்கம் ஜீயர் ரங்கராமானுஜ மகாதேசிக சுவாமிகளுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி சென்னை மாம்பலம், ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. அவர்களுடைய திரு உருவ படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

விசுவ இந்து பரிஷத் அகில உலக முன்னாள் செயல்தலைவர் எஸ்.வேதாந்தம் தலைமை தாங்கினார். நங்கநல்லூர் காமாட்சி சாமிகள், ராம கிருஷ்ண மடத்தைச் சேர்ந்த பக்தி விருத்தானந்தா, காஞ்சி சங்கரமடத்தின் பிரதிநிதி முத்துராமன், விசுவ இந்து பரிஷத் பொதுச்செயலாளர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. பேசியதாவது.

தர்மம், ஆச்சாரம் ஆகிய 2 வார்த்தைகளும் பிரபலமானவை. இதில் தர்மம் என்றும் மாறாது. ஆச்சாரம் இடத்துக்கு இடம், காலத்துக்கு காலம் மாறுபடும். ஆதிசங்கரர் காலம் தொட்டு இன்று வரை உள்ள அனைத்து மடாதிபதிகளும் இதனை பின்பற்றி வருகின்றனர். நாத்திகர்கள் மற்றும் கடவுள் மறுப்பு கொள்கைகள் ஓங்கி இருந்த காலத்திலும், இந்து மதத்தில் ஒற்றுமை இல்லாத நேரத்திலும் மடாதிபதி ஜெயேந்திரர் இந்து மதத்திற்கு ஆற்றியபணிகள் மகத்தானவை. இந்தப்பணியை விசுவ இந்து பரிஷத்தும் இணைந்து செய்தது பாராட்டுக்குரியது.

இடையில் காஞ்சி மடம் பிராமணர்களுடைய மடம் என்று தவறாக பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை. அமைச்சராக இருந்த கக்கனின் சகோதரர் இதனை நிரூபித்து காட்டினார். ஜெயேந்திரர் எந்த கருத்தையும் நேர்மையாக எதிர்கொள்ளக்கூடியவர். தமிழகத்துக்கு நாத்திக சக்திகளால் சோதனை ஏற்பட்ட போது, அவற்றுக்கு சவாலாக ஜெயேந்திரர் திகழ்ந்தார்.

சமுதாயத்தில் உள்ள அனைத்து இந்து மத அமைப்புகளையும் ஒருங்கிணைத்து அரவணைத்து சென்றவர் ஜெயேந்திரர். பலமொழிகளை அறிந்த ஜெயேந்திரர் மறைவு இந்து மதத்திற்கு பேரிழப்பாகும். அவர் இந்து மதத்திற்கு ஆற்றிய பணியின் மதிப்பை எவராலும் குறைக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி செல்லமுத்து, விசுவ இந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி, ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ., நரம்பியல் நிபுணர் எஸ்.கல்யாணராமன், பேராசிரியர் வி.வி.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பேசினர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமிகளின் திரு உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் செய்திகள்