குளித்தலை அருகே 2 கிராமங்களுக்கு இடையே மோதல் - 20 பேர் கைது

குளித்தலை அருகே 2 கிராமங்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-06 22:42 GMT
குளித்தலை,

குளித்தலை அருகே 2 கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவானவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குளித்தலை அருகே உள்ள எழுநூற்றுமங்கலத்தை சேர்ந்தவர் தர்மர் மகள் அனுசியா (வயது 20). என்ஜினீயரிங் படித்துவரும் இவர் நேற்று முன்தினம் பிடாரி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி சாமி கும்பிடுவதற்காக சென்றபோது கீழகுட்டப்பட்டியை சேர்ந்த சிலர் கிண்டல் செய்துள்ளனர். இதுதொடர்பாக எழுநூற்றுமங்கலம் மற்றும் கீழகுட்டப்பட்டி ஆகிய 2 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கல், உருட்டு கட்டை, அரிவாள் உள்ளிட்டவைகளால் தாக்கி கொண்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரும் தாக்கப்பட்டனர். இதில் 6 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அனுசியா அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த குளித்தலை போலீசார் கீழகுட்டப்பட்டியை சேர்ந்த பிரபு (24), கவுதம்(27), மனோஜ்(32), செல்வம் (60), சங்கர்(23) ஆகிய 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 10-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.

இதேபோல் எழுநூற்றுமங்கலத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் ராஜேஷ் (24) அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கீழகுட்டப்பட்டியை சேர்ந்த ராஜபாண்டியன்(24), தேவா(22), அன்பழகன்(22), பழனி(45), தமிழரசன்(24) ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 10-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.

கீழகுட்டப்பட்டியை சேர்ந்த மதியழகன் மகன் மனோகரன் (28) அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் எழுநூற்றுமங்கலத்தை சேர்ந்த ரஞ்சித் (25), பிரபாகரன் (24), ரியாஸ்கான் (22), ராஜேஷ்(23), கருப்பண்ணன் (40), சண்முகம்(46), ராஜேந்திரன்(48), பழனியப்பன் (40), சக்திவேல் (30), துரைசாமி (35) ஆகிய 10 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 5-க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

குளித்தலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது, உருட்டு கட்டையால் தாக்கியது, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கீழகுட்டப்பட்டியை சேர்ந்த பிரபு (24), கவுதம்(27), மனோஜ்(32), செல்வம்(60), சங்கர்(23) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 4 புகார்களின் அடிப்படையில் மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்