தேவராயபுரத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

தேவராயபுரத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2018-04-06 23:30 GMT
எருமப்பட்டி,

தேவராயபுரத்தில் இன்று (சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அதையொட்டி அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆசியாமரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவராயபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள தேவராயபுரத்தில் தேவையான முன்னேற்பாடு பணிகள் விழா குழுவினர் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்துவதை கண்காணிப்பதற்கு மாவட்ட அளவிலான ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுக்களும், வட்ட அளவிலான ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த மாவட்ட அளவிலான ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழுவில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, நாமக்்கல் உதவி கலெக்டர், நாமக்கல் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர், நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு, நாமக்கல் இணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்), நாமக்கல் துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) ஆகிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேற்று நேரில் பார்்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் வாடி வாசல் அமைப்பு, காளைகளை திறந்துவிடும் கதவு அமைப்பு சரியாக உள்ளதா?, காளைகளை சோதனை செய்யும் கால்நடைத்துறை அலுவலர்களுக்கான ஏற்பாடுகள், ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் வாடிவாசலின் இருபுறமும் அரசு அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பார்வையிடுவதற்கான மேடை, விழா குழுவினர் அமர்வதற்கான மேடை அமைக்கப்பட்டு உள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் ஜல்லிக்கட்டு மைதானத்தில் இருபுறமும் தடுப்பு வேலிகள் முறையாக அமைக்கப்பட்டு உள்ளதையும், காளைகள் வெளியேறும் பகுதியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சீனிவாசன் மற்றும் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழாக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்