காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ-மாணவிகள் சாலைமறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கந்தர்வகோட்டை அருகே கல்லூரி மாணவ-மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-04-06 22:45 GMT
கந்தர்வகோட்டை, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளின் மறியல், கடை அடைப்பு போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் நேற்று கந்தர்வகோட்டை அருகே புனல் குளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தாசில்தார் பொன்மலர், போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் கல்லூரி முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, ஏனாதி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர். இதில் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.வேந்தன்பட்டியில் தொடங்கிய மனித சங்கிலி மேலைச்சிவபுரி வழியாக ஏனாதி வரை நடைபெற்றது. இப்பகுதியில் ஏற்கனவே ஜல்லிக்கட்டிற்காக இது போன்ற மனித சங்கிலி போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்