காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பூட்டுப்போட முயற்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில், வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பூட்டுப்போட முயன்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-06 22:30 GMT
திருவாரூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பூட்டுப்போடும் போராட்டம் நேற்று நடத்தப்படும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் போலீசார் அங்கு இரும்பு தடுப்பு கம்பிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு நேற்று காலை திரண்டனர். நகர செயலாளர் பாவா தலைமையிலும், தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையிலும் வடக்கு மாவட்ட செயலாளர் கணேஷ் பாண்டியன், வடக்கு மாவட்ட தலைவர் ஆரோக்கியசெல்வம், ஒன்றிய செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பியபடி போலீசார் அமைத்து இருந்த இரும்பு தடுப்பை தாண்டி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பூட்டுப்போட செல்ல முயன்றனர்.

அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்