காவிரி பிரச்சினையில் போராட்டம் என்ற பெயரில் தி.மு.க. நாடகம் நடத்துகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

காவிரி பிரச்சினையில் போராட்டம் என்ற பெயரில் தி.மு.க. நாடகம் நடத்துகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2018-04-06 22:45 GMT
மதுரை,

திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர், அப்பக்கரை, செட்டிப்பட்டி ஆகிய கிராமங்களில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கோலப்போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் கடந்த 3-ந்தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருகிற 9-ந்தேதி நல்ல தீர்ப்பு கிடைக்க இருக்கிறது.

தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் காவிரி பிரச்சினையில் போராட்டம் என்ற பெயரில் நாடகத்தை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க. தமிழர்களின் உரிமைக்காக போராடி வரும் நிலையில், தி.மு.க. இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருவது நல்லதல்ல. தமிழர்கள் நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் புறநகர் மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்