போலீசார் விரட்டியதால் ரே‌ஷன்அரிசி கடத்திய வேனுக்கு தீவைத்து விட்டு 3 பேர் தப்பி ஓட்டம்

ரே‌ஷன் அரிசியை வேனில் கடத்தியவர்களை பிடிக்க போலீசார் அதனை விரட்டிச்சென்றனர். அப்போது அதிலிருந்தவர்கள் வேனுக்கு நிறுத்தி தீ வைத்து விட்டு தப்பி ஓடினர்.

Update: 2018-04-05 22:37 GMT

நாட்டறம்பள்ளி,

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் லாரிகள் மூலம் ரே‌ஷன்அரிசி கடத்தப்படுவதாக உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் தலைமையிலான போலீசார் நாட்டறம்பள்ளி பகுதியில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் குட்டிகவுண்டனூர் கிராமப்பகுதியில் சென்றபோது அங்குள்ள சரவணன் என்பவர் வீட்டின் பின்னால் லாரி மற்றும் பால் ஏற்றிச் செல்லும் வேன் ஆகியவை சந்தேகப்படும்படியாக நிறுத்தப்பட்டிருந்தன.

போலீசார் அவற்றை சோதனை செய்வதற்காக அருகில் நெருங்கினர். அப்போது அவர்கள் வருவதை பார்த்ததும் அங்கு பதுங்கியிருந்த சரவணன், அவரது தம்பி சதீஷ் மற்றும் நண்பர் தனசேகரன் ஆகியோர் வேன் மற்றும் லாரியை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றனர்.

போலீசார் அந்த வாகனங்களை விரட்டிச்சென்றனர். போலீசாரை திசை திருப்ப சிறிது தூரம் சென்ற பின்னர் அவர்கள் லாரியை அங்கு ஒரு இடத்தில் விட்டு விட்டு, மூவரும் வேனில் தப்பிச் சென்றனர். போலீசார் அந்த லாரியில் 65 மூட்டைகளில் 3 ஆயிரத்து 250 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்துள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேனில் தப்பியவர்கள் அன்சாகரம் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைக்கவே போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு ஒரு விவசாய நிலத்தில் சரவணன் உள்பட 3 பேரும் வேனுடன் பதுங்கி இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் திடீரென வேனின் டயர்களில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதைப்பார்த்த பொதுமக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்தனர். எனினும் வேனின் பின்பகுதி மற்றும் டயர்கள் எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, கடத்தல்காரர்கள் தடயத்தை அழிக்க வேனிற்கு தீ வைத்திருக்கலாம். அதில் 10 மூட்டைகளில் 500 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்துள்ளது. தப்பிச் சென்ற 3 பேரையும் தேடி வருகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்