அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் பேட்டி
மத்திய அரசு அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் கூறினார்.
பரமக்குடி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அதனை காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகள் சார்பில் பரமக்குடியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையில் முன்னாள் மாநில இளைஞரணி அமைப்பாளர் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ. திசைவீரன், நகர் செயலாளர் சேதுகருணாநிதி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முருகேசன், நகர் இளைஞரணி செயலாளர் சம்பத்குமார், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆலம், நகர் தலைவர் அப்துல் அஜீஸ், ம.தி.மு.க. நகர் செயலாளர் பழ.சரவணன், மாவட்ட துணை செயலாளர் பசீர் அகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வேந்தை சிவா மற்றும் மனித நேய மக்கள் கட்சி, த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ. உள்பட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் காந்தி சிலை முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்பு முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கிடம் பேசி காவிரி ஒழுங்கு குழு அமைக்க உறுதுணையாக இருந்தார். அதற்கு பின்பு பா.ஜ.க. அரசு அதனை கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்தது. தற்போது கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. அரசு தமிழக மக்களையும், தமிழகத்தையும் வஞ்சிக்கிறது.
கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு இது மொழி பிரச்சினை அல்ல. தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினை. நீர், உணவு இல்லாமல் யாரும் இருக்க முடியாது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபடி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். மத்திய அரசு அடுத்த தலைமுறையினரை கருத்தில் கொண்டு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தி.மு.க. செயல்தலைவர் திருச்சியில் இருந்து சென்னை வரை இதற்காக நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். அது முழு வெற்றியை தரும். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உறுதுணையாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தை முன்னிட்டு பரமக்குடி பஸ் நிலையம், பெரியகடை பஜார், ஐந்துமுனை பகுதி உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாததால் கிராம மக்கள் வருகை குறைவாக இருந்தது. வழக்கம் போல செயல்படும் வாரச்சந்தையும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.