தஞ்சையில் வருமானவரி அலுவலகத்தை பூட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

தஞ்சையில் உள்ள வருமானவரி அலுவலகத்திற்குள் புகுந்த நாம் தமிழர் கட்சியினர், அங்கிருந்த ஊழியர்களை வெளியே அனுப்பி விட்டு உள்ளே அமர்ந்து அலுவலகத்தை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-04-05 23:00 GMT
தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நேற்று தஞ்சை மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்சியினர் சாலை மறியல், ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சியினர் மண்டல செயலாளர் குகன்குமார், மாவட்ட செயலாளர் கந்தசாமி ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள், வருமானவரி அலுவலகத்தின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த ஊழியர்களை வெளியே அனுப்பி விட்டு அனைவரும் உள்ளே அமர்ந்தனர். மேலும் உள்ளே இருந்தவாறு அலுவலகத்தின் கண்ணாடியிலான கதவை பூட்டிக்கொண்டனர்.

உள்ளே இருந்தவாறு அவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், காவிரி எங்கள் பிறப்புரிமை என கூறியும் கோஷமிட்டனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் போலீசார் வருமானவரி அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கதவை திறக்குமாறு சைகை மூலம் கூறினார். ஆனால் அதற்கு அவர்கள் உடன்படாமல் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.

இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு வந்து அலுவலகத்தின் பூட்டை திறக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அதன்பிறகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கதவை திறந்து விட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்