காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட தி.மு.க. கூட்டணி கட்சியினர் 5 ஆயிரத்து 453 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-05 22:00 GMT
கடலூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஏப்ரல் 5-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்து இருந்தன. அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையம், பஸ் நிலையம், போக்குவரத்து கழக பணிமனைகள் மற்றும் தபால் நிலையம், வங்கிகள் போன்ற இடங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் பிரச்சினைக்குரிய இடங்கள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மாவட்டம் முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் தலைநகரான கடலூர் உழவர் சந்தை அருகில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 55 பேரையும், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 27 பேரையும் போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் அந்த வழியாக வந்த விழுப்புரம் அரசு பஸ்சை மறித்துபோராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் பஸ்சின் மேற்கூரையில் ஏறி நின்று மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நகர துணை செயலாளர்கள் செந்தில், ராஜதுரை, மாநில நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பாவாணன், ஸ்ரீதர், ப.ரா.முரளி, வினோத், தொகுதி துணை செயலாளர் கோபால், ஒருங்கிணைப்பாளர்கள் கிட்டு, கலியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கலைஞர், மாவட்ட அமைப்பாளர்கள் செல்வம், சுரேஷ், பாபு உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கருப்பையன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து எதிரே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

தி.மு.க. கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் கூட்டணி கட்சியினர் வடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு 4 முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., திராவிடர் கழக மாநில செயலாளர் துரை.சந்திரசேகர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் சிவகுமார், நாராயணசாமி, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், காங்கிரஸ் நகர தலைவர் சக்கரையாஸ், த.வா.க. மாநில அமைப்புகுழு செயலாளர் குமரவேல், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி ஷேக்தாவூது உள்பட 450 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

அதேபோல் குமராட்சி பஜார் தெருவில் நடைபெற்ற சாலை மறியலில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாமல்லன் தலைமையில் 75 பேரையும், நெல்லிக்குப்பம் அண்ணாசிலை அருகில் தி.மு.க. நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் செய்த 168 பேரையும், மேல்பட்டாம்பாக்கத்தில் அண்ணாகிராம ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட கூட்டணி கட்சியினர் 450 பேரையும், கடலூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் காசிராஜன் தலைமையில் நடுவீரப்பட்டு கடை தெருவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 175 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி எம்.ஜி.ஆர். சிலை அருகில் துரை.கி.சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் 100 பேரையும், கீரப்பாளையம் சந்திப்பில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சபாநாயகம் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் 40 பேரையும், கிள்ளை பஜார் தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 15 பேரையும், பண்ருட்டி 4 முனை சந்திப்பில் மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமையில், நகர செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க., கூட்டணி கட்சியினர் 200 பேரையும் போலீசார் கைது செய்து அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர்.

நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 1,500 பேரையும், சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை அருகில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 155 பேரையும், ஸ்ரீமுஷ்ணம் காமராஜர் சிலை அருகில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்க.ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 150 பேரையும், காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. நகர செயலாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 250 பேரையும், லால்பேட்டை கைகாட்டியில் தி.மு.க. நகர செயலாளர் முகமதுகாஜா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 65 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ரெட்டிச்சாவடி பஸ் நிறுத்தம் எதிரே ஒன்றிய செயலாளர் சுப்புராம் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 190 பேரையும், சிதம்பரம் தெற்கு வீதியில் தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 300 பேரையும், புவனகிரி அருகே ஆதிவராகநல்லூரில் ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ராஜகுரு தலைமையில் 18 பேரையும், விருத்தாசலம் பாலக்கரை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் 50 பேரையும் கைது செய்து அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்தனர்.

கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமையில் விருத்தாசலம் பஸ் நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட நகர செயலாளர் தண்டபாணி மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட 800 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் விருத்தாசலம் பாலக்கரையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாத்துக்கூடல் சக்திவேல் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை விருத்தாசலம் போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்