டாக்டரின் மனைவியை கட்டிப்போட்டு ரூ.4 லட்சம் நகை, பணம் கொள்ளை - 4 பேர் கைது

டாக்டரின் மனைவியை கட்டிப்போட்டு ரூ.4 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-04 23:58 GMT
மும்பை,

மும்பை தார்டுதேவ் ஸ்லேட்டர் சாலை பகுதியை சேர்ந்தவர் சரத் ஷோரப். டாக்டர். இவர் அந்த பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரீட்டா (வயது69). இவர்கள் அங்குள்ள கைட்டி டேரஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

கடந்த மாதம் 6-ந்தேதி ரீட்டா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, கூரியர் ஊழியர் போல் வந்த வாலிபர் ஒருவர் தண்ணீர்கேட்டு கதவை தட்டினார். அவருக்கு ரீட்டா தண்ணீர் எடுத்து வந்தபோது, அந்த வாலிபர் அவரை வீட்டிற்குள் தள்ளினார். அங்கு மறைந்து இருந்த அந்த வாலிபரின் கூட்டாளிகள் 3 பேர் வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் ரீட்டாவை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தார்டுதேவ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், அந்த கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையல்காரராக வேலை பார்த்து வந்த கங்காதவர் ஷெட்டி(22) என்ற வாலிபர் தான் தனது நண்பர்கள் 4 பேரை ஏவி கொள்ளையடித்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் கொள்ளையில் தொடர்புடைய சுரேஷ் சந்த்(23), அர்ஜூன் ராவல்(24), ஜிதேஷ் நாயக்(27) ஆகிய 3 பேரை வாஷியில் வைத்து கைது செய்தனர். மற்றொருவர் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்