ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு கேட்ட வழக்கு: போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு கேட்ட வழக்கில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-04-04 22:37 GMT
மதுரை,

வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் உள்ளது. இந்த ஆலையின் சட்டப்பிரிவு பொது மேலாளர் சத்யப்பிரியா மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தூத்துக்குடியில் தாமிர ஆலை 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தற்போது 2-வது யூனிட் அமைக்கும் வகையில் இதன் விரிவாக்க, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. 2 யூனிட்டும் இயங்கினால், இது இந்தியாவின் மிகப்பெரிய தாமிர உற்பத்தி மையமாக திகழும். இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் தவறான தகவல்களை பரப்பி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், ஆலைக்கு வாகனங் களில் சென்று வர முடியவில்லை. தொழிற்சாலை பணியாளர்களுக்கும், தொழிற்சாலை சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்போவதாகவும் அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் வருகின்றன. சிலர் தற்கொலைப்படையாக மாறி ஆலைக்கு சேதம் விளைவிப்பதாக கூட்டங்களில் பேசுகின்றனர். ஆலையில் 3500 பேர் வேலை செய்கின்றனர். தொழிற்சாலை எந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் சேதமடைந்தால் அவற்றை ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமையும். எனவே ஆலைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ஏற்கனவே போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு போதிய பாதுகாப்பு இல்லை, அச்சுறுத்தல் உள்ளது என ஆலை நிர்வாகம் கருதினால், புதிய மனுக்களை காவல்துறையிடம் வழங்கலாம். அந்த மனுக்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்